×

பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து வேலை; மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக பாஜ கூண்டோடு மாற்றம்: அமித்ஷா அதிரடி முடிவு; கலக்கத்தில் அண்ணாமலை

சென்னை: தேர்தல் செலவுக்கு கொடுத்த பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து வேலை செய்ததால் கடும் சரிவு என தமிழக பாஜ மீது ஏராளமான புகார்கள் டெல்லி தலைமைக்கு சென்றுள்ளதால், கடும் கோபத்தில் உள்ள அமித்ஷா, மோடி ஆகியோர் முழுமையாக கட்சியை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் பாஜ என்ற அமைப்பே இல்லாமல் இருந்தது. தமிழிசை சவுந்திரராஜன், மாநில பொறுப்புக்கு வந்த பிறகு கட்சி குறித்த பேச்சு மாநிலம் முழுவதும் எழுந்தது. ஆனால் கட்சி வளரவில்லை. முருகன், மாநில தலைவராக வந்த பிறகு ஓரளவு மாற்றுக் கட்சியினர், பாஜவில் இணைந்தனர். அதன்பின்னர் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால், 4 எம்எல்ஏக்கள் கட்சிக்கு கிடைத்தது. பின்னர் அவர் ஒன்றிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

அண்ணாமலை வந்ததும் கட்சி வளரும் என்று மேலிடம் எதிர்பார்த்தது. ஆனால், அவரோ கட்சியின் நிர்வாகிகளைப் பற்றிய வீடியோ, ஆடியோ வெளியிடுவதில்தான் குறியாக இருந்தார். பின்னர் தன்னை வளர்ப்பதில் குறியாக இருந்தார். மேற்கு மாவட்டத்தில் கொங்கு பகுதியின் தனது சமுதாய மக்களிடம் தான் பெரிய தலைவராக வளரவேண்டும் என்பதற்காகத்தான் அதிமுக கூட்டணியை உடைத்தார். அதற்காக வேண்டும் என்றே அதிமுக தலைவர்கள் பற்றி குறைகளை கூறினார். ஒரு கட்டத்தில் அதிமுக அவர் எதிர்பார்த்ததுபோல தானாக வெளியேறியது.அவர் நினைத்தது நடந்தது. பாஜ தலைமையில் தனி அணி அமைந்தது. ஆனால் எதிர்பாராதது, தமிழகத்தில் பாஜ வளராது என்பதை கணிக்கத் தவறி விட்டதுதான். ஆனால் மேலிடத்தை நம்ப வைத்து தமிழகத்தில் பாஜ 7 இடங்களைப் பிடிக்கும் என்று கூறினார். இதை நம்பித்தான் 8 முறை தமிழகத்துக்கு மோடி பிரச்சாரம் செய்தார்.

ஆனால், உண்மை நிலவரத்தை நம்பிய அமித்ஷா பிரச்சாரத்துக்கே வர மறுத்து விட்டார். தற்போது தேர்தல் முடிந்து விட்டது. தேர்தலில் பாஜ ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்பது மட்டுமல்ல, பாஜ மாநில தலைவராக உள்ள அண்ணாமலையே 3வது இடத்துக்கு தள்ளப்படுவார் என்ற தகவல் மேலிடத்துக்கு தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். பாஜ சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்(வேலூர்) மட்டுமே 2வது இடத்துக்கு வருவார். பாஜவில் போட்டியிட்ட ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், கன்னியாகுமரியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாஜவில் 2வது இடத்துக்கு வருவார்கள். ஆனால், தேனியில் தனி சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், ராமநாதபுரத்தில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம், தர்மபுரியில் போட்டியிட்ட சவுமியா அன்புமணி ஆகியோர் 2வது இடத்துக்கு வரலாம்.

ஆனால் அவர்கள் தனி சின்னம் என்பதால், அவர்கள் வாங்கும் வாக்கு பாஜ கணக்கில் வராது. பாஜ சின்னத்தில் போட்டியிடவில்லை. இதனால் மற்ற எல்லா இடத்திலும் பாஜ 3வது இடத்துக்கு தள்ளப்பட்டு விடும். பல இடங்களில் டெபாசிட் பறிபோகும் நிலைதான் தற்போது உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த கதவல்கள் எல்லாம் உளவுத்துறை மூலம் ஒன்றிய அரசுக்கு தெரியவந்தது. இதனால்தான் பாஜ மேலிடமும், அமித்ஷாவும் அதிர்ச்சி அடைந்தனர். பாஜ சார்பில் வேட்பாளர்களுக்காக பணம் கொடுக்கப்பட்டது. தென்சென்னைக்கு ரூ15 சி, மத்திய சென்னைக்கு ரூ18 சி, வடசென்னைக்கு ரூ 12 சி, திருவள்ளூருக்கு ரூ8 சி, அண்ணாமலைக்கு 25 சி என்று மாநிலம் முழுவதும் மேலிடம் சார்பில் பணம் விநியோகம் செய்யப்பட்டது. இந்தப் பணம் முறையாக நிர்வாகிகளுக்கு போய் சேரவில்லை. மக்களுக்கும் போய் சேரவில்லை.

இடையில் உள்ள நிர்வாகிகள், ெபாருப்பாளர்கள் என்று ஆள் ஆளுக்கு கிடைத்ததை சுருட்டிக் கொண்டனர். மேலும் பல இடங்களில் பூத்துகளுக்கே நிர்வாகிகள் இல்லாததால், பணத்தை வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்ட ஆட்களிடம் கொடுத்தனர். அவர்களோ தேர்தலுக்கு முதல்நாளே ஊரை காலி செய்து விட்டு சென்று விட்டனர். இவ்வாறு பணத்தை பாஜ நிர்வாகிகள் சுருட்டிய தகவல் தற்போது வெளியானதும், மேலிடம் அதிர்ச்சியானது. இது குறித்து விசாரிக்க ஆட்களை நியமித்துள்ளனர். அவர்கள் மாவட்ட வாரியாக செலவு விவரத்தை விசாரித்து வருகின்றனர். இதனால் முறையாக பணத்தை செலவு செய்யாதது, கட்சியினரை வளர விடக்கூடாது என்பதற்காக பொருப்பாளர்களை மாற்றியது, வேட்பாளர்களை மாற்றியது என்று பல குளறுபடிகளை அண்ணாமலை செய்துள்ளார். அவருக்கு பல மாநில நிர்வாகிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதனால் தேர்தலுக்குப் பிறகு தமிழக பாஜ நிர்வாகத்தை கூண்டோடு மாற்ற அமித்ஷா, மோடி ஆகியோர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தற்போது தேர்தல் முறைகேட்டை விசாரிக்கும் நிர்வாகிகள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் பல மாற்றங்கள் நடைபெறும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். பாஜ சார்பில் வேட்பாளர்களுக்காக பணம் கொடுக்கப்பட்டது. தென்சென்னைக்கு ரூ15 சி, மத்திய சென்னைக்கு ரூ18 சி, வடசென்னைக்கு 12 சி, திருவள்ளூருக்கு ரூ8 சி, அண்ணாமலைக்கு 25 சி என்று மாநிலம் முழுவதும் மேலிடம் சார்பில் பணம் விநியோகம் செய்யப்பட்டது. இந்தப் பணம் முறையாக நிர்வாகிகளுக்கு போய் சேரவில்லை. மக்களுக்கும் போய் சேரவில்லை.

The post பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து வேலை; மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக பாஜ கூண்டோடு மாற்றம்: அமித்ஷா அதிரடி முடிவு; கலக்கத்தில் அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Tamil Nadu ,BJP ,Amit Shah ,Annamalai ,CHENNAI ,Tamil Nadu BJP ,Delhi ,Modi ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் தாஹூத் மக்களவை...